Monday, June 25, 2012

ஏலாதி


ஏலாதி

ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால்  ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.

ஏலாதி ஆசிரியர்

ஏலாதி ஆசிரியரின் பெயர் கண்மேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் உள்ளலாம்.

தற்சிறப்புப் பாயிரம் – கடவுள் வாழ்த்து

இந்நூலில், தற்சிறப்புப் பாயிரமாக அமைந்தப் பாடல்,

“அறுநால்வ ராய்ப்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் – பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு”

இப்பாட்டில் வரும் ”அறுநால்வர்” என்பதற்கு,
(அறுநால்வர் – இருபத்துநான்கு பேர்)
  1. ஐம்பெருங்குழு – 5
  2. எண்பேராயம் – 8
  3. ஐவகைச் சுற்றம் – 5
  4. ஆறங்கம் – 6
 என்று பொருள் கொண்டு உரையெழுதியிருக்கிறார்கள். இது பொருந்தாது. அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பதையும் ஈண்டு பார்ப்போம்!

அறுநால்வர் – எண்மூன்று

அறுநால்வர் என்பது நிகழ்க்காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வரைக் குறிக்கும். சூளாமணி என்ற ஐஞ்சிறுங்காப்பிய நூலில், 

என்முத லிருபத்தீரிருவர் நாதர்கள்
நின்முத லீரறு வகையர் நேமியர்
மன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்
தொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே – 400

திரிசஷ்டி சலகா புருஷர்களைக் குறிக்கும் அப்பாடலில் வரும், ”என்முத லிருபத்தீரிருவர்” என்ற சொற்றொடரை நோக்குக. இதன் பொருள் “என்னை முதலாகக் கொண்டு இருபத்து நான்கு பேர்கள் நாதர்களாவர் (தீர்த்தங்கரர்களாவர்). 
மேலும், திருநூற்றந்தாதி என்ற நூலில் வரும்,

”மொண்மூ வொருபரு வம்பொழிந் தாங்கிரு கொப்பினுட்பா
குண்மூ விருவகைக் காலத் திடையுல குய்யக்கொள்ளு
மெண்மூ வருமல்ல தீசரல் லாமைநல் லீசரென்று
திண்மூ டர்கடொழிந் தேவர் மெய்காட்டித் தெளிவிப்பரே” – 97

என்ற பாடலில் வரும் “மெண் மூவரு” என்ற சொற்றொடரையும் நோக்குக.
(மெண் மூவரு – எண்மூவர் – இருபத்துநால்வர் – இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள்.)

இவற்றால் ஏலாதி கடவுள் வாழ்த்தில் வரும் அறுநால்வர் என்ற சொற்றொடர் சமணத் தீர்த்தங்கரர்களைக் குறிக்கும் என்பது விளங்கும்.

பதிப்பு வரலாறு

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நூல் கருத்து

சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.

ஏலாதியும் குறளும்

பதினெண் கீழ்க்கணக்கு நூலுள் பெரும்பாலான நூல்கள் திருக்குறள் கருத்தை போற்றி வருவதுபோல, ஏலாதியின் பல பாடல்கள் குறளின் கருத்தைக் கொண்டு விரவி வருகின்றது. ஏலாதியின் சீரியக் கருத்துக் கொண்ட சில பாடல்களை இங்குப் பார்க்கலாம்.

“கொலை புரியான், சொல்லான் புலால்மயங்கான் கூர்ந்து
அலை புரியான் வஞ்சியான் யாதும் –நிலைதிரியான்
மண்ணவர்க்கும் அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கு மேலாய் விடும். – 2

தேன் மலிப் பூங்கோதாய், பிறவுயிர்களை கொல்லாதவன், அதற்கு இணங்காதவன், புலால் உணவை உண்ணாதவன், பிறர்க்கு துன்பம் செய்யாதவன், எவருக்கும் வஞ்சனைப் புரியாதவன், எந்நிலையிலும், தன்னிலையிலிருந்து தாழாதவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன், இம்மண்ணுலகத்தோர் மட்டுமன்றி விண்ணுலகத்தோரும் போற்றிவார்கள்.

சாவா எளிதரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிதரிது மெய்போற்றால் – ஆவதன்கண்
சேறல் எளிது நிலையரிது தெள்ளியராய்
வேறல் எளிதரிது சொல் – 39

உயிரை விடுதல் எளிது. ஆனால் கல்வியில் சான்றோனாய் திகழ்தல் அரிது. இல்லறத்தை ஏற்பது எளிது. ஆனால் அதன் உயர்நிலையிலிருந்து வழுவாது நிற்றல் அரிது. துறவறத்தை ஏற்பது எளிது. ஆனால், அதனை முழுதாய் நோற்றல் அரிது.

ஏலாதி நோயைக் குணப்படுத்தி உடம்பைத் தேற்றுவது போல, ஏலாதிச் செய்யுள்கள், மன கசடுகளை அகற்றி ஆன்மத்தில் முன்னேற்றும் என்பதில் ஐயமில்லை. 

யாவரும் ஏலாதி கற்றல் வேண்டும்!

அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!

இரா.பானுகுமார்,
சென்னை

Sunday, April 15, 2012

ஸ்வஸ்திகம்

பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.
இச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,
சமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது
தீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்
தான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.
சமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.
வெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த
சின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்
கொள்வார்கள். இது வெறும் அடையாளச் சின்னம் மட்டும் தானா?. மேலே
படியுங்கள்.

மங்கள சின்னங்கள்


சமண ஆகமங்கள் கூறும் மங்கள சின்னங்களில் இதுவும் ஒன்று.
மற்ற மங்கலச் சின்னங்கள் வருமாறு.

“மங்களகாரக வஸ்தூனாம் ததி தூர்வா அட்சத
சந்தன நாளிகேர பூர்ணகலச ஸ்வஸ்திக தர்பண
பத்ராசன வர்த்தமான மத்ஸ்யயுகள ஸ்ரீவத்ஸ
நந்தியா வர்த்தா தீனாம் மத்யே ப்ரதமம் முக்யம் மங்களம்.


ஸ்வஸ்திகம் – தத்துவ விளக்கம்





ஸ்வஸ்திகம் – ஜிநதர்மஸ்வரூபம். ஆங்கிலத்தில் “Swasthik – a symbolic
representation of Jina Dharma” என்று சொல்லலாம். ஸ்வஸ்திகத்தைப்
பார்க்கும் போது உயிரின் நோக்கம் தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் சமண
பெரியார்களால் (ஆச்சாரியர்கள்) அமைக்கப்பட்டது தான் இந்த ஸ்வஸ்திக்.
இச்சின்னத்தில் உள்ள ஒவ்வொரு கோடுகளும், புள்ளிகளும் உள்ளார்த்தம்
கொண்டவை. உயிரின் நோக்கத்தைக் காட்டுபவை.

a. ---- (Long Base Line) இந்தக் கோடு இல்லறத்தைக் குறிக்கும்.
சமணம், மக்களுக்கு இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்களை
வகுத்திருக்கிறது. மக்கள் தங்கள் நிலைமைக்கேற்ப ஏதாவதொன்றை
ஏற்று வாழலாம். முதலில் இல்லறம் ஏற்று, ஆண்டு அனுபவித்து,
நல்லறம் நடாத்தி, பக்குவம் பெற்ற பின்னர், துறவறம் ஏற்கலாம்.
(சீவக நம்பியின் கதையே இதற்கு சாட்சி).

b. | (Long straight Line) இந்தக் கோடு துறவறத்தைக் குறிக்கும்.
இல்லறம் ஏற்று பின் துறவறமும் ஏற்கலாம் அல்லது நேரே துறவறமும்
ஏற்கலாம். நேரே துறவறம் ஏற்றவர்கள், சில காரணங்களால், மீண்டும்
இல்லறம் ஏற்று, அக்காரணங்கள் முடிந்த பின் துறவறத்திற்கும் மாறலாம்.
(இதற்கு 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சாரியர் பூஜ்யபாதரின்
வாழ்க்கையே சாட்சி).

c. – (Short Lines) இந்நான்குக் கோடுகள் பிறவியின் சுழற்சியைக்
குறிக்கும். இச்சுழற்சியை மேருமந்தரப் புராண ஆசிரியர் “மாற்றில் சுழற்சி2”
என்று வர்ணிக்கிறார். உயிரானது தன் வினைப்பயனால், ஒவ்வொரு
பிறவியாக பிறந்து, பிறவிச் சுழற்சியில் உழன்றுக் கொண்டிருக்கும்.
நல்வினைக் (காதி வினை) கட்டால் தேவ, மனித கதியிலும், தீவினைக்
(அகாதி வினை) கட்டால் மிருக, நரக கதிகளிலும் சுழன்றுக்
கொண்டிருக்கும்.

d. . (Three Dots) இவைகள் மும்மணி3களைக் குறிக்கும். நான்கு
கதிகளிலும், சுழலும் பிறவியானது, இந்த மூன்று மணிகளைக்
கடைப்பிடித்தால் இந்த பிறவியில் இருந்து விடுபடலாம். மும்மணிகள்,
வடமொழியில் இரத்தனத்திரயம் என்று அழைக்கப்படும். இந்த புள்ளிகள்
முறையே நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் என்றழைக்கப்படுகிறது.
பிறவியில் இருந்து விடுபட நினைக்கும் உயிர்களுக்கு அருமருந்தாகத்
திகழ்வது இம்மும்மணிகள். (மும்மணிப் பற்றியறிய என்னுடைய
மும்மணிகள் கட்டுரையைப் படிக்கவும்)

e.

(Crescent) இப்பிறை வடிவம் சித்தசிலா என்னும் வீட்டுயிர்கள் தங்கும் இடத்தின்
குறியீடு. அஃதாவது, பிறவியானது, மும்மணிகளைக் கைக்கொள்வதன் மூலம்
பிறவிச் சுழற்சியிலிருந்து விடுப்பட்டு, இருவினையுங் நீங்கி மூன்று உலகத்தின்
உச்சி4 என்றழைக்கப்படும் சித்தசிலா அல்லது சிலாதலம் என்றழைக்கப்படும்
இடத்தில் சென்று பேரின்பானந்தந்தில் திளைக்கும். அவ்வாறு வீட்டு பேறடைந்த
(சிவகதி) உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை. சித்தசிலா பற்றியறிய
என்னுடையக் கட்டுரையைப் படிக்கவும்.

f. . (Single Dot) இந்தப் புள்ளி வீடுபேறடைந்த உயிரைக் குறிக்கும்.
சமண இலக்கியங்கள் இவ்வுயிரை சிவகதி5யடைந்த உயிர் என்றழைக்கின்றன.
அவ்வாறு சிலாதலம் சென்றடைந்த உயிர் மீண்டும் பிறப்பெடுப்பதில்லை.
“பிறவா நெறி” தந்த பண்ணவன் தாளைத் தோனியாகக் கொண்டு, மும்மணி
யென்னும் துடுப்புப் பெற்று, பிறவி என்னும் கடலினை கடப்போம்.
வாரீர், வாரீர்!!


இரா.பானுகுமார்,
சென்னை,


அடிக்குறிப்புகள்:

1. http://jainsquare.com/2011/05/01/24-tirthankars-symbols/

2. கருணையும் அறிவும் உண்டியும் உரையுளும் ஈதல் காமம்
மருளிலா இறைவன் பாதம் சிறப்போடு வணங்கல் மையல்
இருளறத் தெளிதல் வென்றோர்க்கு இறைவனது அறத்தைச் சீலம்
மருவி நின்று ஒழுகல் மாற்றில் சுழற்சி தீர்மருந்தி தென்றார் – மேரு
மந்தர புராணம் – பாடல் – 345

3. ”மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
அப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
இப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபெற் றாரோய்” - சூளாமணி
– பாடல் 201

4. “கேவல மடந்தை என்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொனொரு பாக மாகக்
காவலன் தானொர் கூறாக கண்இமை யாது புல்லி
மூவுல குச்சி இன்பக் கடலினுள் மூழ்கி னானே” – சீவக சிந்தாமணி
– பாடல் – 3117

5. “அணிவரு சிவகதி யாவது இன்பமே” - சூளாமணி

Friday, April 06, 2012

சிலம்பும் குறளும்

சிலம்பும் குறளும்

”என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறதக் கேட்ட திருத்தகு நல்லீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்!”

என்று தமது சிலப்பதிகாரத்தை நிறைவு செய்யும் முன் இளங்கோவடிகள் உலகத்தாருக்கு அறவுரை வழங்குகிறார். அவை முழுமையும் சமண கருத்துக்கள் என்பதையாவரும் அறிவீர். ஆனாலும், நாம் கவனிக்காமல் விட்டக் கருத்து ஒன்றிருக்கிறது. அவற்றை ஈண்டுப் பார்ப்போம். மேலே வரும் அறவரிகளை மறுமுறை படியுங்கள். திருக்குறள் அதிகாரங்களை அவைகள் நினைவுப்படுத்துகின்றன அல்லவா?!


இதனால் இளங்கோவடிகள் திருக்குறளைப் படித்திருக்கிறார் என்று
கருதலாமா? படித்திருக்கலாம் என்றுதான் பல அறிஞர்கள்
கருதுகிறார்கள். யான் இக்கருத்தில் சற்றே மாறுபடுகிறேன்.
படித்திருக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். :-) படிக்காமல்
இருந்தால் அக்கருத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவே?
எனின், எந்த சமயக் கருத்தையும் எந்த மொழியில் எழுதினாலும்,
அவை எந்த காலக்கட்டத்தில் எழுந்தாலும் அவைகள் ஒரே மாதிரிதான்
இருக்கமுடியும். காட்டாக, அருகனுக்கு “எண்குணன்” என்ற விளி
பண்டைய எல்லா மொழிகளிலும் (அர்தமகதி, கன்னட, சூரசேனி,
சங்கதம்) பயின்று வருவதைக் காணலாம்.

இதனால் மேலே சொன்ன இருபத்தைந்து கருத்துக்களும் எல்லா
சமண மொழி இலக்கியங்களிலும் வருவது கண் கூடு. இவைகள்
மற்ற சமயங்களிலும் வருகின்றனவே என்று கருதுவோர்க்கு, வருதல்
கூடுமெனினும், “Consistence” ஆக, சமணத்தில் மட்டுமே பயின்று
வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


இரா.பானுகுமார்,
சென்னை

Thursday, March 01, 2012

Three Jewels

Three Jewels

மும்மணிகள் – மூன்று மணிகள். என்ன விஷேசம் அந்த மணிகளில்? அது
என்ன அவ்வளவு விலை மதிப்பில்லாததோ? அதை நாம் சூடமுடியுமா?
போன்ற கேள்விகளுக்கு விடைக் காண மேலே படியுங்கள்.

சமணத் தத்துவத்தையும் அதன் சாராம்சத்தையும் பிழிந்து ஒரு கிண்ணத்தில்
வைத்தால் அதுதான் மும்மணிகள்! மும்மணிகளை விளங்கிக் கொண்டாலே
சமணத் தத்துவத்தை விளங்கிக் கொண்ட மாதிரி தான். சமணத்தின் ஆணிவேர்
இந்த மும்மணிகள். மும்மணியை மிக சுருக்கமாகக் கொடுக்க முயன்றிருக்கிறேன்.
அதே நேரத்தில் அதன் அதன் உள்பொருள் மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஆங்கிலத்தில் “in a Nut shell” என்பார்களே, அதுபோல இந்த மும்மணிகள்
சமணத் தத்துவத்தின் குறிக்கோளை அறிந்துக் கொள்ளக் காட்டப் பயன்படும்
குறியீடு எனலாம்.

இரத்தினத் திரயம் - மும்மணிகள்


1. நற்காட்சி* – சம்யக் தரிசனம்
2. நல்லறிவு – சம்யக் ஞானம்
3. நல்லொழுக்கம் – சம்யக் சாரித்திரம்

இந்த மூன்று மணிகளை அறிய கீழே இரண்டு பாடல்களைக் கொடுக்கிறேன்.
புரிகிறதா என்று பாருங்கள்!!

ஐஞ்சிறுக்காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில்,

”மெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான
அப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி
இப்பொரு ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட
கைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபெற் றாரோய்”

- சூளாமணி – பாடல் 201

ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவக சிந்தாமணியில்,

”உள்பொருள் இதுவென உணர்தல் ஞானமாம்
தெள்ளிதன் அப்பொருள் தெளிதல் காட்சியாம்
விள்ளற இருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதிற் றரித்தலை ஒழுக்கம் என்பவே”

- சீவக சிந்தாமணி – பாடல் 2845

என்ன புரிந்ததா? என்னதான் நச்சினார்க்கினியர் உரையும், பெருமழைப் புலவர்
உரையும் வைத்துக் கொண்டுப் படித்தாலும் மும்மணிகளை, அதன் வீச்சை
உள்வாங்கிக் கொள்ள சற்று சரமம்தான். இதன் கருத்தை சுருக்கமாக,
அதேசமயம் அதன் பொருள் மாறாமல் புரிந்துக் கொள்ள அல்லது விளக்க
என்ன வழி என்று பலதடவை நினைத்து, நினைத்து வழித் தெரியாமல்
நின்றிருக்கிறேன். ஆனால் ஒரு எளிதான வழியிருந்திருக்கிறது என் கண்
முன்னாலேயே? ஆனால் என்னால் தான் அவற்றைப் “பார்க்க” முடியவில்லை.

தேவர் உரைப்பத் தெளிந்தேன்!


நினைத்தவர்க்கு கொடுப்பதுக் கற்பக விருட்ஷம். நினைக்காதவர்களுக்கும்
கொடுப்பது நம்ம திருக்குறள். எனக்கு கைக் கொடுத்த அப்பாட்டு, கல்வி
என்ற அதிகாரத்தில்,

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

- திருக்குறள் – பாடல் 391

இக்குறளுக்கு விளக்கம் வேண்டாம் என்று நினைக்கிறேன். இக்குறள்
மும்மணியின் சாரம். எவ்வாறு என்றுப் பார்ப்போம்!!

நற்காட்சி – கற்க – எவற்றை கற்க வேண்டும் என்று ஆராய்ந்துப் பார்த்தல்.

நல்லறிவு – கசடறக் கற்பவை – அவ்வாறு ஆராய்ந்துப் பார்த்தை ஐயமின்றிக்
கற்றுத் தெளியவேண்டும்.

நல்லொழுக்கம் – நிற்க அதற்குத் தக – தெளிந்தப் பின் அவ்வாறு ஒழுகவேண்டும்.


இதுதாங்க மும்மணிகள்!! :-)



இரா.பானுகுமார்,
சென்னை

பி.கு: * நற்காட்சி – மாசறுக் காட்சி என்றும் கசடறக் காட்சி என்றும் சமண இலக்கியங்களில் தரவுகள் உண்டு!